சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி.யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் நடிகர் சூரி புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று முறை விசாரணை நடத்தியிருந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு சம்மன் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவர் மீதும் மறுவழக்குப் பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் நேரில் வரவழைத்து விசாரிக்கும் திட்டத்தில் உள்ளனர்.