ஆடியோ விவகாரத்தைத் திசை திருப்பவே அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், பதவியில் இருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏவாக இருந்த டி.ஆர்.பி. ராஜா தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அதோடு ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் பி.டி.ஆரிடம் இருந்த நிதியமைச்சகத்தை தென்னரசுவிடம் கொடுத்துவிட்டு, பி.டி.ஆருக்கு ஐ.டி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டு வந்த பி.டி.ஆரை மாற்றுவதற்கு என்ன காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் பிடிஆர் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி விவகாரத்தின் காரணமாகவே அவர் மாற்றப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், “30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் என்பது தமிழகத்தின் முக்கிய அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அந்த ஆடியோ விவகாரத்தை திசை திருப்பவே இந்த அமைச்சரவை மாற்றம். இதுபோன்ற எந்த முயற்சியும் மக்கள் மத்தியில் எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.