கரோனாவைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியும், முகக்கவசமும் அவசியம். அதைவிட அவசியம் தடுப்பூசி போடுவது என்று தொடர்ந்து அரசுகளும், ஆய்வாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும் தங்கள் தேவைகளுக்காகக் கூடுகின்ற மக்கள் விதிமுறைகளை மறந்து குவிந்து வருவது பேரச்சத்தை ஏற்படுத்துகிறது.
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி முக்கியம் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டோக்கன் வழங்கும் முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் ஒன்று ரேசன் கடைகள். ஏராளமான ரேசன் கடைகள் பகுதி நேரக்கடைகளாக இருப்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் டோக்கன் முறைகள் காணாமல் போகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1002 ரேசன் கடைகள் இருந்தாலும் பாதிக்கடைகளுக்கு மேல் தமிழக அரசின் 14 பொருட்கள் இதுவரை வரவில்லை. அதனால் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு பணம் கொடுத்துவிட்டு பொருள் வர வர கொடுக்கிறார்கள். மாதக்கடைசி என்பதால் பொருள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் ரேசன் கடை திறக்கும் நாளில் ஒரே நேரத்தி்ல் மொத்த மக்களும் கூடுவதால் பெரிய சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் உள்ள ரேசன் கடை இன்று திறக்கும் நாள் என்பதால் நேற்று (25/06/2021) இரவு முதலே பொதுமக்கள் வந்து பை, கல், செப்பல்கள் வைத்து இடம்பிடித்ததோடு பலர் அங்கேயே தங்கிவிட்டனர்.
இன்று (26/05/2021) காலை கடை திறக்கும் போது நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசையில் சிறிய இடைவெளிக் கூட இல்லாமல் கரோனா அச்சமின்றி நெருக்கி நின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே பரவல் இருந்துள்ளது என்ற அச்சமும் அவர்களிடம் இல்லை.
"டோக்கன் கொடுத்தாங்க பணம் கொடுத்துட்டு 14 பொருள் வரலன்னு சொன்னாங்க. இன்னைக்கு 400 பேருக்கு பொருள் வந்திருக்குனு தெரிஞ்சது அதை வாங்க வந்தாச்சு. இந்த கடை இன்னும் சில நாள் கழிச்சு தான் திறப்பாங்க அப்ப வந்தால் பொருள் இல்லன்னா என்ன செய்யறது. அப்பறம் மாதம் முடிஞ்சுடும். மாதம் முடிஞ்சா பொருள் தருவாங்களானும் தெரியல" என்றனர் பொதுமக்கள்.
அதிகாரிகள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக டோக்கன் வழங்கி பொருள் கொடுத்தால் இப்படி மக்கள் குவியமாட்டார்கள். கரோனாவும் பரவாது. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஜூன் மாதம் வழங்க வேண்டிய வழக்கமான பொருட்களையும் நிவாரணப் பொருட்களையும் ஜூலை மாதத்தில் வாங்கலாம் என்றால் அதற்கான அறிவிப்பை செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். இல்லை என்றால் தமிழக ரேசன் கடைகளில் இன்னும் சில நாட்களில் கூட்டம் அதிகரிக்கும்.