திருவாரூர் அருகே 2000 கிலோ ரேஷன் அரிசி ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் விவசாயிகள் வட்டாரத்தில் வேதனையை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் அருகே திருக்காரவாசல் வெள்ளையாறு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தில் நேற்று இரவு லாரி ஒன்று வந்து நின்றது. அதைக் கண்ட பாதசாரிகளும், பொதுமக்களும் சாதாரணமாக நிற்கிறது என்று கடந்து சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் குறைந்ததும் லாரியிலிருந்த மர்ம நபர்கள் சிலர் சுமார் 50 மூட்டைக்கும் அதிகமான 2 ஆயிரம் கிலோ அரிசியைப் பாலத்திற்கு அடியில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே தண்ணீரில் குவியலாகக் கொட்டிவிட்டு லாரியை விரட்டிச் சென்றுவிட்டனர்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்ற லாரி அதிவேகமாகப் போவதைக் கண்ட இளைஞர்கள் சிலர் அங்கு கொட்டப்பட்டிருந்த அரிசி குவியலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் மற்றும் இணையத்தில் வெளியிட, அந்தப் பதிவு இப்போது வைரலாகியுள்ளது. தகவலறிந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.ஐ தென்னரசு உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தண்ணீரில் போனது போக மீதமிருந்த அரிசியையும் போலீசார் மீட்டனர்.
இந்த அவலம் குறித்து விவசாய சங்க நிர்வாகி சுப்பையன் கூறுகையில், “நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 மாக உயர்த்தி வழங்க வேண்டுமென அரசை வலியுறுத்திக் கொண்டுள்ள நிலையில், வியர்வையில் விளைந்த நெல்லில் கிடைத்த அரிசியை இப்படி ஆற்றில் கொட்டி விரயமாக்குவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள துறைகுடி கிராமத்தில் ராஜகுரு என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3280 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததோடு ராஜகுருவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் இன்று ரேஷன் அரிசியை ஆற்றில் கொட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.