ரேஷனில் அரிசி பெறும் கார்டுதாரர்களுள் நபர் ஒருவருக்குக் கூடுதலாக 5 கிலோ அரிசியும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கார்டுதாரர்களுக்கு வழக்கத்தைவிட இருமடங்கு அரிசியும் விலையின்றி வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில், கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கியது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 9,71,043 ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் வீதம் மொத்தம் 97 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், ஜூன் மாதமும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடப்பு மாதத்திற்கான அத்தியாவசிய உணவுப்பொருள்களையும் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன். ரேஷன் கார்டுதாரருக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி பெறக்கூடிய கார்டுதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசியும், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பெற்றுவரும் அரிசியின் அளவை விட இருமடங்காக உயர்த்தியும் விலையின்றி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,577 ரேஷன் கடைகள் மூலம் 8,56,106 அரிசி கார்டுதாரர்களுக்கும், 41,630 சர்க்கரை கார்டுதாரர்ளுக்கும், 2,941 காவலர் ரேஷன் கார்டுகளுக்கும், 40,056 முதியோர் உதவித்தொகை பெறும் கார்டுதாரர்களுக்கும், 496 அன்னபூர்ணா கார்டுதாரர்களுக்கும், 79,819 ஏஏஒய் திட்ட கார்டுதாரர்களுக்கும், 887 இலங்கை அகதிகள் கார்டுகளுக்கும் என மொத்தம் 10 லட்சத்து 21,935 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏப்ரல், மே மாதங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த கார்டுதாரர்களுக்கு நடப்பு ஜூன் மாதமும் அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் வாங்க வரும் கார்டுதாரர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, மெய்யனூர், ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, மேட்டூர் ஆகிய 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.
முன்னதாக அவர், சேலம் சத்திரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதைத் திங்களன்று நேரில் ஆய்வு செய்தார். அத்தியாவசியப் பொருள்கள், கார்டுதாரர்களுக்கு தடையின்றி உடனுக்குடன் கிடைத்திட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.