
கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மெரினா போலீசார், மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சாவை கடத்தி விற்பனைக்காக வைத்திருந்ததாக இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ் மற்றும் ராஜகோபால் ஆகிய இருவரை விசாரித்து வந்தனர். தொடர்ந்து இரண்டு பேரிடம் நடத்தி முடிக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மெரினா காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்றது. பிடிக்கப்பட்ட 22 கிலோ கஞ்சாவிலிருந்து ஆய்வுக்காக 100 கிராம் கஞ்சா அனுப்பப்பட்டது. மீதமுள்ள 21.9 கிலோ கிராம் கஞ்சா காவல் நிலையத்திலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்குப் பதிலாக 11 கிலோ கஞ்சாவை மட்டுமே இருப்பில் காட்டியுள்ளனர் போலீசார்.
22 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகத் தெரிவித்த சென்னை போலீசார், அதனை நிரூபிக்கத் தவறியதால் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ் மற்றும் ராஜகோபால் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.