விஞ்ஞான வளர்ச்சியில் ஆன்லைன் வர்த்தகம் எல்லாத் தொழிலுக்கும் பயன்படுகிறது. அப்படித்தான் இந்த செய்தி கூறுகிறது. அதன் விவரம் இதுதான்.
மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஓஎல்எக்ஸ் என்ற ஆன்லைன் மூலம் அரிய வகை கடல் பொருட்கள் விற்பனைக்குசெய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக அரிய வகை கடல் பொருட்களை விற்க முயன்றவர்களுடன் ஆன்லைன் வர்த்தகம் மூலமே யார் என்று தெரியாமல் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் விலைபேசி அந்த பொருட்களை வாங்க இருப்பதாக கூறியுள்ளனர்.

பொருட்களோடு அவர்களை ஈரோட்டிற்கு வரவழைத்தனர். இதை நம்பி அரிய வகை கடல் பொருட்களுடன் வந்த இரண்டு இளைஞர்களை ஈரோடு வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அவர்களை விசாரித்தனர். அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த வீர ராஜ்குமார் மற்றும் நகுலேசன் என்பதும், அவர்களிடமிருந்து பவளப்பாறைகள், கடல் பஞ்சு, கடல் விசிறி, சிலந்தி சங்கு, மாட்டுத்தலை சங்கு, கோப்பை வடிவ பவளப்பாறைகள் உள்ளிட்ட அரிய வகை கடல் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 80 லட்சம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எப்படி இந்த பொருள்கள் கிடைத்தது இதன் பயன்பாடு என்ன என தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.