பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கர்நாடக ஐகோர்ட் பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
நித்யானந்தா மீது பெண் சீடர் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்கார புகார் கூறினார். இதுதொடர்பான வழக்கு பெங்களுரு ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குக்கு ஒத்துழைக்காமல் வந்த நித்யானந்தா வழக்கை இழுத்தடித்து வந்தார். இதனால் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
பிரவாரண்ட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார் நித்யானந்தா. கோர்ட் 17ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் 17ஆம் தேதியை கடந்தும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.
அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு விசாரணை முடியும் வரை அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கர்நாடக ஐகோர்ட் பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளேன். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.