கோவை - ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் செக்போஸ்ட் அருகில் ராமநாதபுரம் ஆய்வாளர் முொருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெசி உதயராஜ் மற்றும் போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வருகிற வாகனங்களை எல்லாம் சோதனை செய்து கொண்டிருந்த போது, ஒரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரித்ததில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் எனத் தெரிய வந்தது. ஒருவன் மட்டும் தஞ்சாவூர். இந்த 6 பேர் மீதும் முன்னரே வழிப்பறி மற்றும் கொலை வழக்கு இருப்பது கண்டறியப்பட்டது. உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் விசாரிக்க பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதில் 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒன்றரை மாதமாக கோவையில் பதுங்கியிருந்து கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்வது போல் நடித்து இரவு நேரங்களில் அந்த வழியே வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்திருக்கின்றனர். அதோடு இவர்கள் கோவை மாநகரில் இருக்கும் பெரிய நகை கடைகளை நோட்டம் பார்த்து நகைகளை கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக கூறியுள்ளனர்.
மேலும் இப்போது தான் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு நகைக் கடை ஒன்றில் கொள்ளை அடிக்க திட்டமிட்டே வந்தோம். ஆனால் அதற்குள் பிடிபட்டு விட்டோம் என்றார்கள் 6 பேரும். பின்னர் இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.