கடந்த 2018- ஆம் ஆண்டு போலீஸ்காரரின் பெண் குழந்தையிடம், சக போலீஸ்காரன் பாலியல் சீண்டலை தொடுத்து பரபரப்பினை கிளப்பிய ராமேஸ்வரம் வழக்கில், 22 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஒன்பது ஆயிரம் அபராதத்தையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு மகிளா நீதிமன்றம்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பினை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு 10 மற்றும் 12 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. காவலர் குடியிருப்பு தானே..? என்ன பயம்..? என்ற எண்ணத்தில் தானும், தன்னுடைய மனைவியும் பணிக்காக வெளியூருக்கு சென்று விட்டு தினசரி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டு பெற்றோர் வரும் வரை தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 23/01/2018 செவ்வாய்க்கிழமை அன்று இரவில் வீட்டில் தனியாக இருந்த விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில், மூத்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலை தொடுத்திருக்கின்றார். அந்த குடியிருப்பில் குடியிருக்கும் சக போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன். பெற்றோர் வந்தவுடன் நடந்த சம்பவத்தை மூத்த பெண் குழந்தை விவரிக்க, அப்போதைய மாவட்ட எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் எஸ்.பி.அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், அவர்களோ வார்த்தையே வராத நிலையில் எஸ்.பியிடம் அழுதபடி முறையிட்டு நிற்க, சம்மந்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளான சரவணனை முதலில் ஆயுதப்படைக்கு மாற்றியும், உடனடியாக போலீஸ் குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும் உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல் சரவணன் மீது வழக்குப் பதியவும் உத்தரவிட்டார். 2018ல் பிப்ரவரி 4 ந்தேதி வழக்குப் பதியப்பட்டு சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் 22 மாதங்களாக நடைப்பெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு இன்று பகிரப்பட்டது.
"குற்றவாளியான போலீஸ் கான்ஸ்டபிள் சரவணனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஒன்பது ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பினை வழங்கினார் நீதிபதி பகவதி அம்மாள். இதனால் நீதிமன்ற வளாகமே பரபரப்புக்குள்ளானது.