களியாக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலையில் போலீசாரின் பதட்டம் அடங்கும் முன், தங்களை விசாரிக்க வந்த எஸ்.ஐ.- க்களை ஓட ஓட விரட்டி கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட கொடூரம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையத்தில் இரு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீனிவாசன் என்ற ஆட்டோ ஓட்டுநரை பவித்ரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் கொலைக்குக் காரணமான சந்தேகப்படும் படியான நபர்கள் அங்குள்ள பேக்கரியில் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த எஸ்.ஐ.க்களான ஜெயபாண்டி, மற்றும் நந்தகுமார் அங்குள்ள பேக்கரிக்கு சென்று குற்றவாளிகளை தேடிய நிலையில் அங்கிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு எஸ்.ஐ.க்கள் மீது ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியதுடன் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி தப்பித்தனர். இதில் எஸ்.ஐ. ஜெய பாண்டியன் தலை மற்றும் கையில் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படுகாயமடைந்த ஜெயபாண்டியனை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இது தொடர்பாக, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, வெள்ளைமாசி வலசை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்ததோடு மட்டுமில்லாமல் தலைமறைவாக இருக்கும் மற்ற 2 நபர்களையும் தேடி வருகிறார்கள்.