ஸ்டேஷனில் விசாரணைக்காக காத்திருந்த இளைஞனை, ஸ்டேஷனிலேயே வைத்துப் படுகொலை செய்த வழக்கில் இன்று சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டணையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இராமநாதபுர மாவட்டத்தின் வட கோடி எல்லையான, கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கிறது சுந்தரபாண்டிய பட்டணம் எனும் எஸ்.பி.பட்டனம். மாவட்டத்தின் 9 போலீஸ் சப்- டிவின்ஷகளில் பனிஷ்மெண்ட் ஸ்டேஷனாக வருவது, இந்த எஸ்.பி.பட்டணம் காவல் நிலையம் மட்டுமே. இந்த காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலத்தெருவினை சேர்ந்த சையது அலி பாத்திமா மகன் சையது முகம்மது மாற்றுத்திறனாளி அம்மாவிற்கு துணையாக உள்ளூரிலேயே உள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறான்.
கடந்த 14/10/2014 அன்று பண்ணைக்கு சொந்தமான டூவீலரை பழுது நீக்க போலீஸ் ஸ்டேஷன் எதிரிலுள்ள ஆரோக்யதாஸ் வொர்க் ஷாப்-பிற்கு கொண்டுட்டு போயிருக்கின்றான். அங்கு டூவீலர் வேலைப் பார்த்ததில் திருப்தி இல்லை சையது முகம்மதுவிற்கு.. இதில், மெக்கானிக்கிடம் வாக்குவாதம் செய்ய, சப்தம் கேட்டு எதிரில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இரண்டு போலீஸ்காரங்க வந்து அவனை கூட்டிட்டுப் போயிருக்காங்க. அதற்குப் பிறகு அவனை பிணமாத்தான் பார்த்திருக்கின்றார்கள் உள்ளூர் ஆட்கள்.
சிறிது நேரத்திலேயே, "கத்தியை எடுத்து எஸ்.ஐ-யை குத்தினான். அதனால் தற்காப்பிற்காக சுட்டேன்" என்றார் போலீஸ் எஸ்.ஐ.காளிதாஸ். அதே வேளையில், "ஸ்டேஷனில் விசாரணைக்காக காத்திருந்த சையது முகம்மதுவை குடி போதையில் அடித்து கொன்று விட்டு, தான் தப்பிப்பதற்காக தன்னையே கத்தியால் கீறிக்கொண்டு இறந்த சடலத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு "என்கவுண்டர் " நாடகமாடியுள்ளார் எஸ்.பி.பட்டணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளிதாஸ்."எனக் கூறி உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் எஸ்.பி.பட்டணம் மக்கள். ஐ.ஜி., டி.ஐ.ஜி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஸ்பாட்டிற்கு வந்த அப்போதைய மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் மயில்வாகனன், " இந்த விவகாரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி தலைமையில் பிரேதப்பரிசோதனை மேற்கொள்வோம். தவறு யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதே.." என வழக்கமாக கூறும் வார்த்தையை கூறி கூட்டத்தை கலைத்தார். அதன்பிறகு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அப்போதைய இராமநாதபுரம் ஜே.எம்.2 நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் சையது முகம்மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பிறகு, இறந்த சையது முகம்மதுவின் மரணத்தைக் கண்டித்து தனது சொந்த செலவில் இந்த வழக்கை நடத்தி வந்தார் மதுரை வழக்கறிஞர் ஜின்னா. இந்நிலையில், சரியாக ஐந்து வருடம் கழித்து சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டணையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதியுள்ளார் ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசேகர். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரப்பரப்பு உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.