ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களை மாற்றியும், நிலையான இடமின்றி சுட்டெரிக்கும் வெயிலில் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள சாலையோரத்தில் மீன்களை விற்பனை செய்கின்றனர் சுமார் 40- க்கும் மேற்பட்ட பெண்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள மக்களின் உணவுத் தேவைக்காக அருகிலுள்ள தனுஷ்கோடி, சேராங்கோட்டை, கரையூர் மற்றும் கோதண்டராமர் கோவில் போன்ற பகுதிகளில் பாரம்பரிய மீனவர்களின் கட்டு மரங்களிலும், சிறு வல்லங்களிலும், கரைவலை மூலமாகக் கடலிலிருந்து பிடிக்கப்படக்கூடிய மீன்களை ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் சுமார் 40- க்கும் மேற்பட்ட பெண்கள். கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் ஒன்று கூடுதலைத் தடுக்க ராமேஸ்வரம் 2- ஆவது வார்டில் நடந்த மீன் விற்பனையைப் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது மாவட்ட நிர்வாகம்.
முறையான நிழற்குடை இல்லாமல் வெயிலில் கருகிய பெண்கள், மீண்டும் முன்பு மீன் மார்க்கெட் செயல்பட்ட இடத்திற்கு எதிரிலுள்ள பொன்னம்பிள்ளை தெருவிற்கு இடமாற்றம் செய்து விற்பனை செய்து வந்தனர். அதுவும் பின்னாளில் சந்தன மாரியம்மன் கோவில் அருகே கொண்டு செல்லப்பட்டு, ஒரு சில நாட்களிலேயே விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்பு துறைமுகம் பின்புறம் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்பொழுது ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. எந்தவொரு நிழலும் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலோடு மீன் விற்பனையைத் துவக்கியுள்ளனர் மீனவப் பெண்கள். எனினும், "வெயிலின் கொடுமை அதிகரிப்பதால் மீன்கள் விரைவாகக் கெட்டுவிடுவதால், மீன்களைப் பொதுமக்கள் வாங்க மறுப்பதாகவும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" வேதனை தெரிவிக்கின்றனர் மீனவப் பெண்கள்.