Skip to main content

ரமலான் எனும் வசந்தம்...! மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., சமூக இணையதள கட்டுரை

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


பரந்து விரிந்த நீல வானத்தின் அழகே ஒரு  தனி  அழகுதான். அது ஒரு இலக்கணமில்லாத புதுக்கவிதை.
 

தூண்களே இல்லாமல்; யாரும் தாங்கிப் பிடிக்காமல்; யாராலும் எட்டவும் முடியாமல்; அந்தரத்தில் நிற்கும் அதிசயம் அது. ஆம், வானம் யாருக்கும் வசப்படுவதில்லை.
 

அந்த வானம் நடத்தும் அதிசயங்களில் பிறை நிலா காலம் முதன்மையானது.
 

 

 

 MJK


நட்சத்திரங்கள் சூழ நடைபெறும் திருவிழாக்கோலம் அது.
 

அதுவும், புனித ரமலானின் வருகைக்காக; உலகமே ஒரு சேர; தலைப்பிறைக்காக காத்திருக்கும் நிமிடங்கள் அலாதியானது.
 

அந்தி சாய்ந்து இரவு கவ்வும் அந்த இளகியப் பொழுதில், மெல்லிய வெண் கீற்றாய் தலைப்பிறை தென்படும் போது அடையும் பரவசத்திற்கு எல்லைகளே இல்லை.
 

11 மாதங்கள் இதற்காகத்தானே காத்திருந்தோம்? என மனதில் சாரால் மழை தூறும்.
 

அப்படியொரு மாதத்தை மீண்டும் அடைகிறோம். இறைவனின் அருள் மழையில் நனைகிறோம்.
 

இம்மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. அதற்காக இறைவனுக்கு நன்றி கூறி வழிபடுவதும் இம்மாதத்தின் சிறப்புகளில் ஒன்று.
 

இஸ்லாமிய எழிலாண்டின் ஏழாம் மாதமான ரமலானில், 30 நாட்களும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. விரதம் என்ற சொல்லைத் தவிர்த்து நோன்பு என்ற அழகிய தமிழ்ச் சொல் இங்கே முன்வைக்கப்படுவதும் ஒரு சிறப்பாகும். 
 

 

http://onelink.to/nknapp

 

சூரிய உதயத்திற்கு முன்பு சஹர் எனும் விடிகாலை உணவருந்தி, சூரியன் மறைந்ததும் நோன்பு நீரருந்தி  நிறைவு செய்யப்படுகிறது.
 

 

ஏறத்தாழ 14 மணி நேரம் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல் இறையடியார்கள் தவமிருக்கிறார்கள். 
 

பல நாடுகளின் தட்ப வெப்பத்திற்கேற்ப இதன் கால அளவு வேறுபடுகிறது.
 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேணப்படுகிறது. இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற பயபக்தியோடு அந்தப் பொழுதுகள் கழிகின்றன.


ஒரு முழு நிலவு அகன்ற நதியில் முகம் காட்டி நகர்வதைப் போன்ற நிகழ்வு அது.
 

இந்த நோன்பை உளத்தூய்மையோடு நீங்கள் கடைப்பிடிப்பதன் மூலம், இறைவனின் மீது பயபக்தி கொண்டவராக மாறலாம் என்கிறது திருக்குர்ஆன் (2 :183)
 

நோன்பின் நோக்கமே அதுதான். அது மனிதனை முழு மனிதனாகப் பண்படுத்துகிறது. ஆன்மீக பயிற்சியின் வழியாக நெறிப்படுத்துகிறது.
 

இக்காலகட்டத்தில் ஆழ்ந்து நடைபெறும் இறைவழிபாடுகளின் போது சிந்தனை தெளிவு கிடக்கிறது. 

 

அது, ஒடையில் ஒடும் தெளிந்த நீரில் கூலாங்கற்கள் தெரிவதைப் போல.

 

நல்லவற்றையும், தீயவற்றையும் பிரித்தறிந்து; நம்மை நாமே சுய பரிசோதனைக்கு ஆட்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது.
 

அந்த வேறுபாடுகளை உணர வைப்பதே திருக்குர்ஆன் அருளப்பட்டதன்  நோக்கம் என்கிறான் இறைவன் (2:185)

 

நோன்பின்போது  எத்தனையோ எண்ண அலைகள் நமக்குள் முட்டி மோதுகின்றன. 
 

ஏழையின் வயிற்றுப் பசியை உணர முடிகிறது. உணவை வீணடிப்பதன் ஆபத்தை அறிய முடிகிறது. தாகமாகத் தவித்து இருப்பதன்  மூலம் தண்ணீரின் தேவையைப் புரிய முடிகிறது.
 

வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் இறைவனோடு உறவாட முடிகிறது. அவனிடம் நம் தேவைகளைக் கேட்க முடிகிறது. அதனால் பஞ்சு மெத்தையில் மனதை இறக்கி வைத்ததைப் போல உணர முடிகிறது.
 

 

 

 

இவை யாவும் நோன்பு ஏற்படுத்தும் உளவியல் மாற்றமாகும்.
 

 

"இறையருளை எதிர்பார்த்து நோன்பு நோற்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது" என நபிகள் நாயகம்(ஸல்) கூறியிருக்கிறார்கள். இந்த நபிமொழிதான் நோன்பாளிகளுக்குச் சரியான திசையைக் காட்டுகிறது.

 

ரமலான் வசந்தங்களின் பூக்கூடையாகும். வசந்த காலத்தில் மரங்கள் பூக்களைக் கொட்டுவதைப் போல, செல்வந்தர்களும், வசதி கொண்டவர்களும் தர்மங்களை அள்ளி, அள்ளி கொடுக்கிறார்கள்.

 

வறுமை ஒழிப்பு காண முன் முயற்சிகளை ரமலான் மாதம் எல்லோரிடத்திலும் தூண்டுவது அதன் மற்றொரு சிறப்பாகும்.
 

ரமலானில் நரகத்தின் வாசல்கள் பூட்டப்பட்டு, சைத்தான்கள் சிறை வைக்கப்படுவதாகவும், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுவதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானை சிறப்பித்து கூறியிருக்கிறார்கள். இது இறை நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

 

 

http://onelink.to/nknapp

 

சூரியன் மறைந்து வானம் விழாக்கோலம் போடும் அந்தப பொன்மாலைப் பொழுதில்; பல மணி நேரம் பசியாலும், தாகத்தாலும் சூழப்பட்ட நோன்பாளி ஒருவர், இறைவனைப் போற்றி தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவுச் செய்யும்போது அவர் அடையும் பூரிப்புகள் அளவிட முடியாதவை. 
 

 

அப்போது  மணம் கமழும் பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுகின்றன என்ற உயர்ந்த நம்பிக்கை அவரது நாடி நரம்புகளில் புத்தெழுச்சியைத் தருகிறது.
 

இப்படி இறையருளை பெறும் ஒற்றை நோக்கத்திற்காக நோன்பிருப்பவர்கள், தங்கள் மரணித்திற்குப் பின்னால் இறைவனின் முன்பாக "ரைய்யான்" என்ற சிறப்பு வாசல் வழியாகச் சுவர்க்கத்தில் நுழைவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
 

இந்த நோன்பு நோற்றல் என்பது வலுக்கட்டாயமாக யார் மீதும் திணிக்கப்படுவதில்லை என்பது அதன் சிறப்பைக் கூட்டுகிறது.
 

கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சிறுவர், சிறுமியர், நீண்ட தூரப் பயணிகள் ஆகியோருக்கு இதில் விதிவிலக்குகள் உண்டு.
 

இறைவன்தான் அளவற்ற அருளாளன் ஆயிற்றே... அவன் இயலாதவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றான். அதில் இயன்றவர்களைப் பிரிதொரு தருணத்தில் அதை நிறைவேற்றவும் வாய்ப்பு தருகிறான். என்ன ஒரு கருணை?

 

ramalan


 

ரமலான் நோன்பு உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே இறை நியதியாகும்.
 

இதை வெறும் சடங்காக, பெருமைக்கானதாகக் கடைப்பிடிப்பதில் பயனில்லை என்பதை நபிகள் நாயகத்தின் (ஸல்) கீழ்க்கண்ட அறிவுரை பகர்கிறது .
 

"நோன்பின்போது ஒருவர் பொய் மற்றும்  தவறான நடவடிக்கைகளை விடவில்லையெனில், அவர் உண்ணாமலும், தண்ணீர் பருகாமலும் இருப்பதில் எந்த நன்மையும் இல்லை" என நபிகள் நாயகம்(ஸல்) எச்சரிக்கிறார்கள்.
 

எனவே, புனித ரமலானில் நம்மை நாமே மனசாட்சிக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள முன்வருவோம். நமது கடந்த கால நிகழ்வுகளின் மீது சுய பரிசோதனைகளைச் செய்வோம்.
 

பிறர் நலம் நாடுதல், மன்னித்தல், இரக்கம் காட்டுதல், அன்பைப் பரிமாறுதல், பழி வாங்கும் குணத்தைக் கைவிடுதல், கண்ணியம் பேணுதல் என உயர்ந்த பண்புகளைக் கடைப்பிடிப்போம்.

கண்ணுக்குத் தெரியாத கிரிமியான கரோனாவுக்கு எதிராக உலகம் இப்போது போராடுகிறது. உலகம் தோன்றியதற்கு பிறகு உலகமே ஊரடங்கில் இப்போது தவிக்கிறது.
 

இஸ்லாம் அறிமுகமான பிறகு, முதன் முதலாக இந்த ரமலானில்தான் உலகெங்கும் இறையில்லங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதை நினைத்து இதயம் கனக்கிறது.
 

இருப்பினும் திருக்குர்ஆனின் அறிவுரைப்படி அதைப் பொறுமையோடும், தொழுகையோடும் எதிர்கொள்வோம். இது தற்காலிகமானது என்பதை மனதில் கொள்வோம்.
 

இல்லங்களில் இருந்தவாரே இறைவனை வழிபடுவோம். ஒவ்வொரு தொழுகையிலும் மனமுருகி பிரார்த்திப்போம்.
 

இறைவா..
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக..
இந்த பூவுலகைக் காப்பாயாக...
கரோனாவின் கொடிய கரங்களிலிருந்து
அனைவரையும் மீட்பாயாக..
இந்தப் புனித ரமலானில்
மீண்டும் வசந்தங்களை வழங்குவாயாக...!
 

ஆமீன்...!
 

சார்ந்த செய்திகள்