Skip to main content

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? ராமதாஸ் கண்டனம்

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
Ramadoss



மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான, மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். 
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008ஆம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களது பணியில் எந்த குறையும் காணப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை பணிநிலைப்புச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் அபத்தமானது மட்டுமின்றி, ஏற்க முடியாததும் ஆகும்.
 

தகுதியற்ற ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று கடந்த 2006ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காரணம் காட்டியும், 42 பணியாளர்களும் தகுதியில்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று கூறியும் அவர்களைப் பல்கலைக் கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முறையான கல்வித் தகுதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரையிலான இரண்டரை ஆண்டுகளில் இவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணிநீக்கம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
 

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேரின் பணி நீக்கத்திற்காக நிர்வாகம் கூறியுள்ள காரணங்கள்  எதுவும் உண்மையல்ல. மாறாக அவர்களுக்கு பதில் புதிய பணியாளர்களை நியமித்தால் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என்ற துணைவேந்தரின் துடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரும் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி, ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் 8 பேராசிரியர்கள், 16 இணைப் பேராசிரியர்கள், 22 உதவிப் பேராசிரியர்கள் என 46 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அடுத்தக்கட்டமாக 63 இளநிலை உதவியாளர்களை நியமிக்கும் நோக்குடன் தான் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்கரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரப்படுத்தி, 2016 நவம்பர் மாதத்தில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்காக மட்டும் ரூ.22 கோடி கையூட்டு வசூலிக்கப்பட்டதாகவும். இப்போதும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 

பொதுவாக துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாக பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபு ஆகும். ஆனால், இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள பாஸ்கரன் புதிய நியமனங்களை மேற்கொள்வதும் அதற்கு வசதியாக தற்காலிக பணியாளர்களை நீக்குவதும் சட்டவிரோதமானவை. பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று கூறி வரும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் தலையிட்டு, தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களை பணி நிலைப்பு செய்து, அதன்பின்  மீதமுள்ள இடங்களை மட்டும் நேர்மையான முறையில் நிரப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்