பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும் அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கு அவினாசியை அடுத்த நாதம்பாளையம் என்ற இடத்தில் நேற்று நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியிருக்கிறார். கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதலமைச்சர் பழனிச்சாமி நனவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.
தமிழக முதலமைச்சராக பெருந்தலைவராக காமராசர் இருந்தபோதே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன்பின்னர் கடந்த 60 ஆண்டுகளில் அத்திட்டம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த அமைக்கப்பட்ட போராட்டக்குழுவுக்கு நான் தலைவராக இருந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி பில்லூர் அணையில் தொடங்கி பெருந்துறை வரை பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக போராடி வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு இப்போது இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிப்படையில் ஒரு விவசாயி. அவர் இப்போதும் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு விவசாயியால் தான் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தான் கொங்கு மண்டல விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் விருப்பம் ஆகும். அதை உணர்ந்து இத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மேலும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்திற்கு நிதி ஒரு பிரச்சினையாக இருக்காது. அதனால் முதலமைச்சர் அறிவித்தவாறு இத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்படும்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் நீர் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தி ஒன்று ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் 538 நீர் நிலைகளில் நிரப்பப்படும். இதன்மூலம் அப்பகுதிகளில் வாழும் 35 இலட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுவதுடன், 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இத்தகைய வளமையான திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.