Skip to main content

'7 ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை...'-பாமக ராமதாஸ் இரங்கல்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Ramadas condolences!

 

சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவருக்குச் சொந்தமான முருகன் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை நடைபெற்று வந்தது. இதற்கிடையே நேற்று மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். ஆனால் அதற்குள் தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியுள்ளது. முதற்கட்டமாக இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியானதாகவும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

 

நகரின் மையப்பகுதியில் பட்டாசுக் கடை வைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும், பட்டாசுக் கடை வைக்க முறையான அனுமதி பெறவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த முறையான தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழக முதல்வர் ஸ்டாலின் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

Ramadas condolences!

 

இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில்7 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பட்டாசுக் கடை விபத்தில் காலித், ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர், அய்யாசாமி உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அய்யாசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த அனைவரும் அவர்களது குடும்பங்களின் வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் ஆவர். அதனால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்தக் குடும்பங்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 

அதேபோல், காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாகப் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, இத்தகைய விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்