Skip to main content

வேலைநிறுத்தம் தொடங்க இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசு ஊழியர்களுடன்  முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும்! ராமதாஸ்

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
ra

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :  ’’பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தம் தொடங்க இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

21 ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

 

கஜா புயல் தாக்கியதால் சின்னாபின்னமாகியுள்ள காவிரி பாசன மாவட்டங்களை சீரமைக்கும் பணியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் பொது நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைப்பது தான் சரியானதாக இருக்கும். கள நிலைமையை அரசு ஊழியர்களுக்கு விளக்கியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தும் இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமையாகும்.

 

ஆனால், இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இதைத் தொடர்ந்து திட்டமிட்டவாறு 4-ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விடுத்த வேண்டுகோளையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிராகரித்து விட்டது. இதனால் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 4-ஆம் தேதி தொடங்குவது உறுதி ஆகி விட்டது. இன்றைய சூழலில் அரசு ஊழியர் வேலைநிறுத்தம் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.

 

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.  புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி  அளித்த ஜெயலலிதா, ஐந்தாண்டு ஆட்சியில் அதை செய்யாமல் 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாகத் தான் இதுபற்றி பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 

 

அக்குழு கலைக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. 33 மாத இழுபறிக்கு பிறகு ஸ்ரீதர் குழு கடந்த 27-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வல்லுனர் குழு அறிக்கை கிடைத்த பின் அதை அரசு உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாதது தமிழக அரசின் படுதோல்வி.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதலமைச்சர் பழனிச்சாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். ’’

சார்ந்த செய்திகள்