உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக லட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரமலான் மாதம் வரும் ஏப்ரல் 25ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 24ந்தேதி பிறை பார்க்கப்பட்டதாக தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக சிறுபான்மை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர், நான் இஸ்லாம் மக்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால், இந்த கொடிய வைரஸ் நோய் பரவாமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இதனை தடுக்க முயற்சி செய்து வருகின்றார். அந்த அடிப்படையில்தான் மக்கள் அதிகம் சமூக இடைவெளியில் சேரக்கூடிய இடம் வழிபாட்டுத்தலங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை எல்லாத் தரப்பு மக்களும் தங்களின் நன்மைக்குத்தான் அரசு சொல்கின்றது என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே நாமும் பள்ளிவாசல்களை மூடிவிட்டு வீட்டிலேயே தொழுது வருகின்றோம். மேலும் இந்த ஊரடங்கு கடந்த 14 ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகின்ற மே மாதம் 3 தேதி வரையில் ஊரடங்கு உத்தரவை மத்திய, மாநில அரசு நீட்டித்துள்ளது.
இந்த நோயினால் யாருக்கும் பாதிப்பு வராமல் பார்ப்பதில் மற்றவர்களைவிட நாமும் அதிக அளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இன்று அல்லது நாளை பிறை தென்பட்டால் ரமலான் நோன்பு ஆரம்பிக்க உள்ளது. இதில் ஏற்கனவே நாம் பின்பற்றி வரும் நடைமுறையே இப்போதும் பின்பற்றி நோன்பு சகஹர், இப்தார் வீட்டிலேயே இருந்து செய்து தாராவீஹ் வீட்டிலேயே தொழுது இந்த நோயிலிருந்து அனைவரும் மீண்டு வர இறைவனை கையேந்தி துவா செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பேணி காக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நோன்பு காலத்தில் அளிக்கப்படும் ரமலான் அரிசி உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிவாசல்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிட ஆணையிட்டுள்ளார். இவற்றை அளிக்கும்போது ஒரே இடத்தில் கூட்டம் கூட கூடாது என்பதற்காகவும், பள்ளிவாசல்களில் எக்காரணத்தை கொண்டும் நோன்பு கஞ்சி காய்ச்சகூடாது என்பதற்காகவும், அதனை ஏழை,எளிய மக்களுக்கு பிரித்து அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இந்த ரம்ஜான் நாளில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் நிலோபர் கபில் கேட்டுக்கொண்டுள்ளார்.