கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், அப்பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கபட்ட நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிவந்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் மீது 153, 153 A, 504, 505 (1)(b) IPC r/w 67 of IT Act 2000- ன் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர், அவர் சென்னையில் இருந்து விசாரணைக்காக, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மாலை 05.00 மணியளவில் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.