சேலத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 3000 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
சேலத்தில் கூட்டுறவு வார விழா திங்கள்கிழமை (நவ. 20) நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இவ்விழா நடந்தது. அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது; “கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருந்தேன். அப்போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 7,500 கோடி ரூபாய் கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று உறுதியளித்து இருந்தோம். அதன்படி கடனை ரத்து செய்தோம்.
அதைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு, 600க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 12,500 ரேஷன் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல், இப்போது தமிழக முதல்வர் 20 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் எளிதாக கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது” என்றார்.
இவ்விழாவில், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய காலக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்பட 3024 பயனாளிகளுக்கு ரூ. 33.99 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்கள், 39 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகளும் வழங்கப்பட்டன.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், அருள், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்யா நீலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் தலைமையில் ஊழியர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.