தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் மே 1- ஆம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊராட்சிகளில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு அறிக்கை, பணிகளின் முன்னேற்ற நிலைகள், ஒன்றிய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு, ஊட்டச்சத்து இயக்கம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேநேரத்தில், கடந்த நிதியாண்டிற்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்திலும், பிளக்ஸ் பேனர் மூலமும் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.