வட்டித்தொழில் செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறைக்கு விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2003 முதல் 2005-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 2002 -03-ம் நிதியாண்டில், நண்பர்களுக்கு ரூ. 2 கோடியே 63 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகவும், அதற்கான வட்டிக்கு வரி செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
2004 – 05-ம் நிதியாண்டில் ஒரு கோடியே 71 லட்சம் கடன் திரும்பி வராததால், வராக்கடனாக அறிவித்த ரஜினி, தனக்கு அந்த ஆண்டில் 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வராக்கடன்களுக்கான பலன்களைப் பெறுவதற்காக ரஜினி, வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளாரா என வருமான வரித்துறையினர், 2005-ல் ரஜினியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், வட்டி தொழிலில் ஈடுபடவில்லை எனவும், நண்பர்களுக்கு கைமாற்றாக கடன் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், வட்டித் தொழிலில் தான் ஈடுபடுவதாகக் கூறி வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதை ஏற்காத வருமான வரித்துறையினர், அவர் வட்டித் தொழிலில் ஈடுபடவில்லை என முடிவு செய்து அறிவித்துள்ளனர்.