நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’எனது அரசியல் பற்றி மக்களுக்கு ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கவே, எனது அரசியல் செயல்பாடுகள் குறித்து விளக்கவே இன்று நான் செய்தியாளர்களை சந்திக்கிறேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நான் சந்ததித்ததில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இன்று பேசுகிறேன்.
நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது தவறு. 2017ஆம் ஆண்டில் இருந்துதான் நான் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறேன்.
1996ஆம் ஆண்டில் இருந்து அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன். நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று கூறிவந்தேன். 2017ம் ஆண்டில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகியிருந்ததால் சிஸ்டம் கெட்டுப்போயிருக்கிறது. முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னேன். அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். ஏன் அப்படி சொன்னேன் என்றால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.