ரஜினியின் இந்தி பற்றிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பல பேச்சுகள் வெளிப்பட்டது. இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மன்றத்தினரரின் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.
புதுக்கோட்டையில் இரவில் நடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளை பேசினார்கள். அதில் பலரும் ரஜினி உடனே அரசியலுக்கு வரவேண்டும் என்பதே பிரதானமாக இருந்தது. தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகு பாண்டியன் பேசும்போது,
நான் 8 வயதில் மன்றத்தில் இணைந்தவன். அதனால் எனக்கு முதலில் ரஜினிதான் தொழில் மற்ற அனைத்தும் அடுத்ததுதான். 2021- சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைவது உறுதி. அதற்காக மன்றத்தின் சார்பில் மகளிர் அணி, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞரணி, இலக்கிய அணி என்று பல அணிகளை மிக விரைவாக கிராமங்களில் உருவாக்கி பலப்படுத்த வேண்டும். அப்போதுதான், நம்மை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற செயல்களை தடுக்க முடியும்.
இன்றைய மக்கள் நலத் திட்டங்களை ஆளும் கட்சியால் அபகரிக்கும் நிலையை தடுத்து அந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவசர தேவைக்கு ரஜினி மன்றத்தில் ரத்தம் கிடைக்கிறது என்கிற நிலையை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அதற்கு நாம் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும்.
இதைவிட ரொம்ப முக்கியமானது நம் மன்றத்தை சேர்ந்த யாரும் மது குடிக்கக் கூடாது. இன்று முதல் மது அருந்த மாட்டோம் என உறுதி மொழி ஏற்க வேண்டும். அதையும் மீறி மது குடிப்பதை நிறுத்த முடியாத குடி நோயாளிகளுக்கு எனது செலவில் இலவசமாக மறுவாழ்வு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன். நாம் இது போன்ற செயல்களை செய்தால்தான் பொதுமக்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படும். அதன்மூலம் மக்களை அணுகி அதிக வாக்குகளைப் பெற்று ரஜினி தலைமையிலான நல்லாட்சி அமைவதை உறுதி செய்ய முடியும் என்றார்.
தொடர்ந்து மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.