கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். நான் மக்களைச் சந்தித்துக் கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது.
இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் (Immuno Suppressant) மருந்துகளைச் சாப்பிடும் நான், இந்த கரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் வந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.
'என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்குத் தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை' என்று சொன்னால், நாலுபேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடாவாக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தபொழுது அர்ஜுன மூர்த்தி என்பவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை கட்சி மேற்பார்வையாளராகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினியின் தற்போதைய அரசியல் முடிவுபற்றி அர்ஜுன மூர்த்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "ரஜினி கடும் மனவருத்தத்தில் உள்ளார் என்பது எனக்குத் தெரிகிறது. கட்சித் தொடங்கவில்லை என்ற அவரது முடிவுக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.