சென்னையிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி "அதிமுக ஆலமரம் போன்றது. அதில் பறவைகள் போல பலர் வருவார்கள்; பலர் போவார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் திமுகவை கடுமையாக எதிர்ப்பவர்கள். கட்சியினரை திருப்திப்படுத்தவே பிரேமலதா அவ்வாறு பேசியுள்ளார். கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. அனைவரையும் அரவணைத்தே அதிமுக செல்கிறது.
ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்தக் கொம்பனும் தடுக்க வேண்டாம். திமுகவினரே தடுத்துவிடுவார்கள். சிறுபான்மையினர் யாரேனும் தப்பு செய்தால் அவர் குற்றவாளி இல்லை எனச் சொல்வார்கள், கொலையாளியே ஒப்புக்கொண்ட பிறகும்கூட.
8 வயது சிறுமி கொடூர முறையில் கொலை செய்யப்பட்டாள். அச்சிறுமி இந்து என்ற காரணத்திற்காக ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. இதேபோல் வில்சன் கொலை வழக்கில் குற்றவாளி சிறுபான்மையினர் என்பதால், எதுவும் பேசவில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக திமுக இருக்கிறது. திமுக விற்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கிறது. உயிர்கள் கசக்கிறது. இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் இந்து மதத்தை இழிவு செய்யும் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுக்கத் தயராகிவிட்டனர். இந்துக்களுக்கு என்ன ஆனாலும் தேர்தலின் போது பட்டையைப் போட்டு ஓட்டு கேட்பதும், தேர்தலுக்குப்பின் அவர்களைப் போட்டுட்டுத்தள்ள திட்டம் போடுவதும் திமுக கூட்டணி.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது ஒருக்காலும் நடக்காது. 80 சதவீத மக்கள் இந்துக்கள். இனி திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு கிடைக்காது. 120 கோடி இந்திய மக்களில் 110 கோடி பேர் இந்துக்கள். இந்து மதத்தை இழிவாகப் பேசுவோரை இந்துக்கள் தாக்கினால் தாங்குவர்களா?
இந்து மத எதிர்ப்பு கொள்கையினால், துரைமுருகனுக்கே தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று. துணை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் ரஜினியைக் கண்டித்துப் பேசவில்லை. ரஜினி பேசியது நியாயம் தான். பெரியார் பேசியது அந்தக்காலம். இந்தக் காலத்தில் கடவுள் இல்லை எனச் சொன்னால் கல்லால் அடிப்போம்.
தஞ்சை குடமுழுக்கு குறித்துப் பேச நாத்திகர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? குழந்தைகளை எல்லாம் இந்தியில் படிக்க வைத்துவிட்டு தமிழ்ப்பற்று உள்ளவர்கள் போல் நடிக்க வேண்டாம். தமிழக அரசின் கோரிக்கைகள் எல்லாம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக உள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். நீட்டில் இருந்து விலக்கு கிடைக்க வில்லை என விளக்கை அணைக்க முடியுமா? நீட்டில் இருந்து விலக்கு கொடுத்தாலும், கொடுக்க வில்லை என்றாலும் சந்தோசமே!" என்றார் அதிரடியாக.
அமைச்சருக்கு என்னதான் ஆயிற்று? சனாதனவாதி போல் இந்தப் பேச்சு பேசுகிறாரே!