ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர்கள் தரப்பில்‘திருச்சி சிறையில் ராஜேந்திரபாலாஜி நலமாக உள்ளார். தைரியமாகவும் இருக்கிறார். புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ள அவர், மனு போட்டு தன்னைச் சந்தித்த வழக்கறிஞர் தரப்பிடம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகங்கள் கேட்க, வாங்கிக் கொடுத்துள்ளனர். அப்போது, கட்சித் தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்தது குறித்த விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். வழக்கறிஞர் தவிர வேறு யாரும் ராஜேந்திரபாலாஜியைச் சந்திப்பதற்கு அனுமதியில்லை என்பதால், யாரும் திருச்சி சென்று சிறைத்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.’எனப் பொதுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. தான் மட்டுமே தனியாகச் செல்லாமல், விருதுநகர் மாவட்ட ஐ.டி. பிரிவுத் தலைவர் பாண்டியராஜனையும், துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார், ராஜேந்திரபாலாஜி. அவ்வப்போது மாத்திரை, மருந்து கொடுத்து கவனித்துக் கொள்ள பாண்டியராஜனும் உடன் சென்றிருக்கிறார் என்பதை விசாரணை மூலம் அறிந்த தனிப்படையினர், அவருடைய போன் தொடர்புகளையும் ஸ்மெல் செய்தபடியே பின்தொடர்ந்துள்ளனர்.
தலைமறைவாக இருந்தபோது ராஜேந்திரபாலாஜி காரின் முன் சீட்டில் அமர்ந்து பயணித்ததை, சுங்கச்சாவடி சிசிடிவி ஜனவரி 2- ஆம் தேதி நள்ளிரவு (12:38:36) பதிவு செய்திருந்த விபரம், தனிப்படையினருக்கு அப்போதே கிடைத்துவிட்டது. ஆனாலும், நான்கு நாட்கள் திணறலான தேடலுக்குப் பிறகே, ஜனவரி 5- ஆம் தேதி அவரைச் சுற்றிவளைக்க முடிந்திருக்கிறது. அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் போட்டோ, இதனைத் தெளிவுபடுத்துகிறது.