கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்த தினமான ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
''1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உலகப்புகழ் வாய்ந்த ஒன்றாகும். சோழர்களின் கலை, கட்டிடக்கலை ஆகியவற்றின் தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் உள்ளது. ஆடி திருவாதிரை விழாவை அறநிலைய, சுற்றுலா, பண்பாட்டு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா காரணமாக வரும் ஆண்டுமுதல் அரசு விழாவாக கொண்டாடப்படும்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
''தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை இது, ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது வரலாற்றின் மைல்கல்'' என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.