சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் - சேத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியபோது - “இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நோக்கம் என்னவென்றால், இன்றைக்கு சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது, மண் விலை கூடிவிட்டது, பால் விலையையும் கூட்டி விட்டனர். இந்த ஆட்சியில் வீடு கட்ட நினைத்தாலும் வீடு கட்ட முடியவில்லை. வேலைக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. வேலை கிடைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சனை நிலவுகிறது. உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்கள், ஆவின் பால் விலை, சொத்து வரி உள்பட அனைத்து விலைகளும் கூடிவிட்டது. 500 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 900 ரூபாய் கட்டுகின்றனர். 5000 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 8000 ரூபாய் வரி கட்டுகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் விலைவாசிகள் தாறுமாறாக உயர்ந்து விட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பவனி வருகிறார். அவர் மக்களிடம் இறங்கி குறைகளைக் கேட்டறிய வேண்டும். விரக்தியின் விளிம்பிலே மக்கள் வாழ்கின்றனர். 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்படவில்லை. வீட்டு வரி கூட்டப்படவில்லை. சொத்து வரி கூட்டப்படவில்லை. இன்றைய திமுக ஆட்சியில், கழிவுநீர் வெளியேற்றும் கட்டணத்தைக்கூட உயர்த்தி விட்டனர். கரண்ட் பில் தொகையைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டனர்.
கரண்ட் பில் தாறுமாறாகக் கூடிவிட்டது. மின்சாரத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியவில்லை. கரண்ட் பில்லைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்து வருகின்றனர். திமுக அரசு கரண்ட் பில் உயர்வைக் கட்டுப்படுத்த மின் வெட்டையும் செயல்படுத்தி வருகிறது. கரண்ட் கட் பண்ணினால் கரண்ட் பில் கூடாது. அதிமுக ஆட்சியில் மின்சாரத்தை விடிய விடிய பயன்படுத்தினாலும் ஒரு அளவிற்குதான் கரண்ட் பில் வரும்.
ஒரு சுபிட்சமான, சுகமான நல்லாட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய பந்தா கிடையாது, மிகப்பெரிய பட்டாபிஷேகம் கிடையாது. ஆனால் இன்று திமுக ஆட்சியில், நேற்று ராஜபாளையம் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்காக போக்குவரத்தை முற்றிலும் தடுத்து, பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். கார், பஸ், வேன், டூவீலர் என அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்துள்ளனர்.
இதனால் அவசரமாக வெளியூர் செல்பவர்கள், மருத்துவமனை சென்றவர்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்கூடத்திற்கும் லீவு விட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் திமுக ஆட்சியில் உள்ளது. இது அட்டூழியம், அக்கிரமம், அநியாயம். ஒரு ஆட்சியில், இது போன்றவை நடக்கக்கூடாது. ஆட்சி கிடைத்தது என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நினைப்பில் திமுக செயல்படக்கூடாது. திமுகவின் இந்த ஆட்சிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திமுகவின் இந்த மக்கள் விரோத ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனப் பேசினார்.