ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். " ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இருக்கிறது" என காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் நீதிபதிகள் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
இதையடுத்து, தான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். இந்நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து அவரை தீவிரமாக மாவட்ட காவல்துறை தேடி வருகிறது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் தற்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் சிறப்பு அமர்வு அமைத்து தன்னுடைய முன்ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் தொடர்ந்து 11 நாட்களாக அவர் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு சாதாரண ஃபோனை பயன்படுத்தி வருவதாகவும், அவரை நெருங்கிவிட்டதாகவும் இன்று அல்லது நாளை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.