பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க சென்னை போக்ஸோ நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது போன்ற புகாரின் அடிப்படையில் சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
வரும் 8ஆம் தேதி வரை ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முழுமையாக விசாரணை முடிவடையாததால் ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம் என ஆசிரியர் ராஜகோபாலன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மறுத்து ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.