புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9- வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காகக் கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர்.
முத்தமிழறிஞர் கலைஞர், மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974- ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும், கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.
அன்னாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் திருவுருவச் சிலையினை கடந்த 14/03/2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.
மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்நன்னாளில் மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவுக்கூறும் வகையில், தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.