தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மருத்துவமனை வளாகத்தில் நீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து பொதுப்பணித்துறை மழை நீரை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மோட்டர்களை வைத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மருத்துவமனை நிர்வாகமும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் தரைதளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.