வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (16.11.2022) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும் என்பதால் 16,17,18 -ம் தேதிகளில் மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.