தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை இயல்புக்கு மாறாக அதிகப்படியான அளவு பொழிந்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதீத கனமழை பொழிவு இருந்தது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக பாதிப்பு இருந்தது. டெல்டா உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகப்படியாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்துவருகிறார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் மழை பாதித்த பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அப்போது பேசிய அவர், “தமிழக அரசு பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட தாதாபுரம் பகுதியில் இன்று (15.11.2021) அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மழை பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், "தற்போது பெய்த மழையால் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதில் குறைபாடு இருந்ததால்தான் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அரசால் மக்கள் இந்தப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளார். எனவே அவர்களுக்கு இந்த அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.