மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் எட்டாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், நிலைமை சீரானவுடன் இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் தனித்தனியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.