“ஏய் போடா போ போ.. அப்படிதான் பண்ணுவேன்” என தமிழக பயணிகளிடம் ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியரின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழக பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதே சமயம், நாகர்கோவில் ரயில் நிலையத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
மேலும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குமிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இருப்பதால் பயணிகள் மொழி பிரச்சனையில் சிக்கி விவரங்கள் தெரியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் சில ரயில்வே ஊழியர்கள், வேண்டுமென்றே பயணிகளிடம் வம்பிழுத்து வருகின்றனர். டிக்கெட் வழங்குமிடத்தில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள், தமிழக பயணிகள் கேட்கும் விவரங்களுக்கு சரியாக பதில் கூற முடியாமல் சில நேரங்களில் அநாகரிகமாக பேசுவதால் தமிழ்நாடு ரயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணி ஒருவர், கவுண்டரில் இருந்த ஊழியர்களிடம் விவரம் கேட்கும்போது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, விரக்தியடைந்த வடமாநிலத்தவர் அந்தப் பயணியை மாற்று மொழியில் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அங்கிருந்த பயணிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததால், கவுண்டரில் இருந்த ஊழியர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இது தொடர்பாக அந்த பணியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
- சிவாஜி