வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்துவரும் நிலையில், இது பிரச்சனைகளைத் திசைதிருப்ப நடத்தப்படும் ரெய்டு என அதிமுகவினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னது உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சனைகளும் எழும்பும்போது அதை திசைதிருப்ப இன்ஸ்டால்மெண்ட் முறையில் இப்படி முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் செல்வம், ''அவர் எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளார். அதை நீதித்துறையிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். சம்மன் அனுப்பும் பட்சத்தில் அதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். மடியில் கணம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்று சொல்வார்கள், எங்களுக்கு அது இல்லை. எனவே வி ரெடி டூ ஃபேஸ் எனிதிங்” என்றார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், ''விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் சோதனை மேற்கொள்வது மனித உரிமைக்கு மீறிய செயலாகப் பார்க்கிறோம். முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துவிட்டால் அவர் ஒன்றும் குற்றவாளி கிடையாது. இது வழக்கமான ஒரு விசாரணைதான்'' என்றார்.