காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டமான 370 நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு லடாக் மக்களைச் சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி லேவில் உள்ள குஷோக்கு பகுலா புட்சல் மைதானத்தில் 2023 ராஜுவ் காந்தி புட்சல் போட்டியின் இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். பின்னர் வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.
முதலில் இரண்டு நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம் தற்போது ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் நாளை(20ம் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. தனது தந்தையான ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை ராகுல் காந்தி லடாக்கில் உள்ள பிரசித்திபெற்ற பாங்காங் ஆற்றில் கொண்டாட இருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் லடாக்கில் ராகுல் காந்தி பைக்கில் பயணம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.