Skip to main content

குஜராத்தில் ராகுல்காந்தி கார் மீது பாஜக நிர்வாகிகள் கல்வீசி தாக்குதல். எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
குஜராத்தில் ராகுல்காந்தி கார் மீது பாஜக நிர்வாகிகள் கல்வீசி தாக்குதல். எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

இது குறித்து கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடந்த சில நாட்களாக, வன்முறையை அரசியல் வழிமுறையாக பாஜக.வினர் கையில் எடுத்துவருவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவருகிறது. அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பனஸ்கந்தா பகுதியினை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது  பா.ஜ.க ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவரது கார் கண்ணாடி உடைந்தது மட்டும் அல்லாமல் அவருடன் சென்ற சிறப்புப் பாதுகாப்புப் படை காவலரும் படுகாயம் அடைந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்வது எதிர்கட்சித் துணைத்தலைவர் என்கிற முறையில் ராகுல்காந்தி அவர்களின் கடமையாகும். அந்த அரசியல் கடமையை நிறைவேற்ற சென்ற ராகுல்காந்திக்கு குஜராத் மாநில அரசு உரிய பாதுகாப்புகளை செய்திருக்க வேண்டும்.

ஆனால், இதற்கு மாறாக ராகுல்காந்தி குஜராத் மாநிலத்திற்கு வருவதை அம்மாநில முதல்வரே அவதூறு பேசி வந்ததோடு மாநில பாஜகவினரை ராகுல்காந்திக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு அதன் அடிப்படையில் ராகுல்காந்தியின் கார் மீது இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்திற்கு குஜராத் மாநில முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வெறிச்செயலை கண்டித்திருக்க வேண்டிய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது என்பது வன்முறையை பிரதமரும் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தாக்குதல் நடத்திய ஜனநாயக விரோத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

மதவெறியர்களால் பொதுமக்கள், வியாபாரிகள், அதிகாரிகள் உட்பட பலர் தாக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீதும் தாக்குதல் நடந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது. இதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய திருநாட்டில் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்வி குறியாகி வருவதோடு, இந்த தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து இது போன்று நடைபெறும் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை மத்திய அரசு கண்டபிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்துவருவது கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்