புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளும் ஊராட்சி ஒன்றியம் வடகாடு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் சிறுமின்விசை குடிதண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் வழக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஒரு சிறுமின்விசை குடிதண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் அப்பகுதி பொதுமக்கள் குடிதண்ணீர் பிடித்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குடிநீர் தொட்டிக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் பிளாஸ்டிக் குழாய் உடைக்கப்பட்டு அந்த குழாயில் மரக்குச்சியை வைத்து அடைத்து வைத்துள்ளனர். மேலும் தொட்டியில் இருந்த தண்ணீரை அப்பகுதி பொதுமக்கள் குடங்களில் பிடித்த போது அதில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிதண்ணீர் பிடிப்பதை நிறுத்திவிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் சுமார் 5 நாட்களாக தொட்டியை சுத்தம் செய்யவோ, அடைக்கப்பட்ட குழாயை சீரமைக்கவோ யாரும் வராததால் அப்பகுதி பொதுமக்கள் குடிதண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது... தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் யாரோ மர்ம நபர்கள் தொட்டியில் கழிவுகளை கலக்கியதுடன் குழாயை அடைத்து வைத்துள்ளனர். இப்போது கழிவுகளை கலக்கியவர்கள் பின்வரும் காலங்களில் விஷம் கலந்து வைத்தாலும் வைக்கலாம் அதனால் கழிவுகளை கலக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.