உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் மற்றம் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, இனி அவ்வகை வாகனங்களிலும் உரிய விதிகளைப் பின்பற்றி சோதனை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், தேர்தலின்போது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்த இந்திய தேர்தல் ஆணையம், இந்தமுறை இரண்டு சிறப்பு பார்வையாளர்களை நியமித்துள்ளது.
எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பதுக்கி எடுத்துச் செல்ல முடியுமோ அத்தனை வியூகங்களையும் வகுத்து, தமிழக அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. பரப்புரை முடிந்த அடுத்த 24 மணி நேரத்தில், தேர்தல் பறக்கும் படைகள், காவல்துறையையும் மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 2016இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாகவும் அரசியல்வாதிகள் பணத்தைப் பதுக்கி எடுத்துச் செல்வதாக புகார்கள் கிளம்பின. என்றாலும், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினரோ, காவல்துறையினரோ சோதனை செய்வதில்லை.
இந்நிலையில், வரும் தேர்தலின்போது ஆம்புலன்ஸ் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனை நடத்த சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் சோதனை செய்யலாம் என அனுமதி அளித்துள்ளது.
‘108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர் மற்றும் அவருக்கு உதவியாக ஒரே ஒரு நபரை மட்டும் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டும். தேவையில்லாத பொருட்கள் மற்றும் பைகளை சிகிச்சை பெறும் நபருடன் ஏற்றக் கூடாது.
நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வரும்போது, சந்தேகத்தின்பேரில் பறக்கும் படையினர், நிலைக்குழு அதிகாரிகள், காவல்துறையினர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுக்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பிற குழுவினர் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டால், அவர்களில் ஒருவரை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
நோயாளியை சிகிச்சைக்கு அனுமதித்த பிறகு, தேர்தல் அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். நோயாளிகளை சிகிச்சையில் சேர்த்துவிட்டு திரும்பிச் செல்லும்போது, சந்தேகம் ஏற்படும் வகையில் வாகனங்களை மறிப்பவர்கள் மீது அருகில் உள்ள காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம்.’ இவ்வாறு வழிகாட்டு நெறிமுறை விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ''தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விதிகளை 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் உள்பகுதி, வெளிப்பகுதிகளில் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து ஓட்டுநர்கள், மருத்துவத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றனர்.