விஷ வண்டுகள் கடித்து தோட்டத்திற்கு சென்ற விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (வயது 71) இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் உள்ளது. இன்று காலை தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக ஆட்கள் வந்துள்ள நிலையில் தோட்டத்தை பார்க்க ஆறுமுகம் சென்றுள்ளார். அப்போது அங்கு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுள் திடீரென நூற்றுக்கணக்கில் பறந்து வந்து ஆறுமுகத்தை கடித்துள்ளது.
கதண்டுகளிடம் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியும் ஒன்றும் ஆகவில்லை. மேலும் அவரோடு அங்கு நின்ற டிராக்டர் டிரைவர் ஈச்சன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த பெரியான் அய்யாச்சாமி மற்றும் தேங்காய் அள்ளுவதற்காக வந்திருந்த நெடுவாசல் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள், ராசாத்தி, மாரி கண்ணு, மீனா மற்றும் தேங்காய் பறித்துக்கொண்டிருந்த கருப்பையா ஆகியோரும் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் இவர்களையும் கதண்டு கடித்துள்ளது. அங்கிருந்து அவரை வெளியேற்றி அவசர அவசரமாக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விவசாயி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விவசாயி ஆறுமுகத்துடன் சேர்ந்து கதண்டுகளிடம் கடிபட்ட டிரைவர் அய்யாச்சாமி, மற்றும் 4 பெண்கள், கருப்பையா உட்பட ஆறு பேரும் படுகாயமடைந்து நெடுவாசல் அரசு ஆரம்ப துணைசுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். கதண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கதண்டுகளை விரட்ட கீரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.