புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கள்ளிவயல் மீனவ கிராமத்திலிருந்து நேற்று நண்பர்களுடன் கடலில் படகில் சவாரி சென்ற மைக்கேல்ராஜ் (23) என்பவர் கடலில் தவறி விழுந்து மாயமான நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வெள்ளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜா (23). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த மைக்கேல்ராஜா, திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நண்பர்களோடு, கடற்கரை கிராமமான கள்ளிவயலில் உள்ள தங்களின் மீனவ நண்பர் மணிகண்டன் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மணிகண்டனுக்கு சொந்தமான படகில் பாண்டிபிரபாகரன், முகமதுமுஜுர், அஜித், குணா, மணிகண்டன், மைக்கேல்ராஜா உள்பட 6 பேரும் கடலுக்குள் படகு சவாரி சென்றுள்ளனர்.
கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் காற்றின் வேகத்தில் சிக்கிய படகு வழக்கத்தை விட வேகமாக ஆடியுள்ளது. இதில் மைக்கேல்ராஜா நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்து மாயமாகியுள்ளார்.
கடலுக்குள் விழுந்த நண்பரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் உடனிருந்த மற்ற நண்பர்கள் கவலையுடன் கரை திரும்பியுள்ளனர். இந்த தகவல் அறிந்து இன்று காலை கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் காவல்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப்பிறகு மைக்கேல்ராஜா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்க கடலுக்குச் சென்றவர் உயிரிழந்த சம்பவம். அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.