இந்தியா முழுவதும் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நோயின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு என நடைமுறையில் இருந்தாலும் மக்களின் அசாதரண போக்கு கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நாளை (25.04.2021) முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நாளை சென்னையில் முழு ஊரடங்கு என்பதால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனையகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் வருகை அதிகரிப்பால் மார்க்கெட் வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையில் சில்லறை வணிகம் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் பயமும், வெயிலின் தாக்கமும்தான் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள். மேலும், மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுமைதூக்கிகள் பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல் பணிபுரிவதைப் பார்க்க முடிந்தது. யாருக்கும் கரோனா என்ற பயமே இல்லாமல் இருந்ததுபோல் காணப்பட்டது.
இதுகுறித்து மணிகண்டன் என்ற வியாபாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, “பெரும்பாலும் தற்போது காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் என அனைத்தும் சந்தையில் விற்கும் விலைக்கே வீட்டருகேயும் கிடைக்கிறது. அதேபோல் சமீபகாலமாக கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாலும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும் சந்தைக்கு வாடிக்கையாளரின் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும்தான் கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாங்கள் ஏழு நாட்களுக்கு கடை வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு நகைகளை அடமானம் வைத்தே எங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். லாபம் என்று எதுவும் இல்லை, முழுவதும் நஷ்டம்தான். தற்போது நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், வாங்கிய காய்கறிகள் அழுகிவிடும். அவை அனைத்தையும் திங்கட்கிழமை வந்து குப்பையில்தான் கொட்ட வேண்டும்” என்றார்.