கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் சண்முகம்(56). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் இளையராஜா(37) என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். சண்முகம் தான் கடன் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு இளையராஜாவிடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். சண்முகம் பணத்தை தராமல் இளையராஜாவை இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சண்முகம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கறாராக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இளையராஜா யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பீர் பாட்டிலை எடுத்து உடைத்து சண்முகம் உடல்மீது பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த சண்முகத்தை அவரது உறவினர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சண்முகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீஸார் சண்முகத்தை மருத்துவமனையில் சந்தித்து புகார் பெற்றுள்ளனர். அவரது புகாரின் பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப் பதிவு செய்து இளையராஜாவை தேடிபிடித்து கைது செய்துள்ளார்.