புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் என்கிற ராபின்சன் 3 துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் மான் வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மான் வேட்டை முடிந்து ஊருக்கு வந்த போது ஒரு விபத்தில் அவரது கார் சிக்கிக் கொண்டதால் திருக்கோகர்ணம் போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது காரில் ரத்தக் கறையும், துப்பாக்கி குண்டுகளும் காணப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் வேட்டையாடப்பட்ட மான் கறி விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ராபின்சன் உள்பட 8 பேர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கரூர் காவல்நிலைய போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான இருவர் உள்பட மூன்று பேரும் முன்ஜாமினுக்காக முயற்சித்து வருகின்றனர். இந்தநிலையில் போலீஸ்காரர் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே போல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் நாளை பணியிடை நீக்கம் செய்யபடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ராபின் என்கிற ராபின்சன் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்வதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் அதற்கான அரசு அனுமதி உள்ளதா என்றும் அல்லது கள்ளத்தனமாக துப்பாக்கி வியாபாரம் செய்கிறாரா என்றும் விசாரணை தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்காக தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் தயாராகஉள்ளனர்.
மேலும் ராபின்சன்னுடன் தொடர்பில் உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர். அடிக்கடி மான் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடி யாருக்கெல்லாம் கறி விற்பனை செய்துள்ளார் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டுள்ளது.