புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் சம்மட்டிவடு ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ராஜா. தனது 22 வது பிறந்த நாள் அன்று தனது இடது கால், முழங்காலோடு தனியாக விழக்கண்டார். அடுத்த சில மாதங்களில் மற்றொரு காலும் அதே பாதிப்பால் அறுத்து எடுக்கப்பட்டது. இது எல்லாம் காதல் திருமணமாகி 6 மாதங்களில் நடந்துவிட்டது. ராஜாவுக்கு உடல்நலமில்லை என்ற நிலையில் அவரது காதல் மனைவி விமலாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். கணவரின் கால்கள் அகற்றப்பட்டு அவதிப்பட்டுவருகிறார் என்ற தகவலை நண்பர்கள் மூலம் அறிந்த விமலா ராஜாவை தேடி வந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் இயற்கை உபாதைகளை அள்ளிக் கொண்டு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.
கணவருக்கு உடல்நலமில்லை என்றால் தவிக்கவிட்டு ஓடும் காலத்தில் இப்படி வந்து உதவிகள் செய்து கொண்டிருக்கும் விமலாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கழிவறை இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தத் தகவல் 'மக்கள் பாதை' ராமதாஸ் மூலமாக நமக்கு வர, மேலவிடுதி கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களின் நிலையை, நக்கீரன் இணையத்தில் கடந்த மாதம் செய்தியாகவும் வீடியோவாகவும் வெளியிட்டிருந்தோம். இந்த குடும்பத்திற்கு அரசு உதவிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்று உதவிகள் கேட்டோம். வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட சேர்மன் ஜெயலெட்சுமி ஆகியோரும் உதவிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.
அதேபோல நமது செய்தியைப் பார்த்து கொடையுள்ளம் கொண்ட பலரும் ராஜா தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். மேலும் பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் உதவிகள் செய்து வந்தனர். இந்தநிலையில் தான் மாவட்ட ஆட்சியர் உமாமகேஷ்வரி நக்கீரன் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்த பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மாலை மேலவிடுதி கிராமத்திற்கு நேரில் சென்று ராஜாவுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியதுடன், அரசு உதவிகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.
விரைவில் பசுமை வீடுகட்ட உத்தரவு வழங்க உள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
*விமலாவை பாராட்டி சால்வை*
மேலும் ஆட்சியர், கால்களை இழந்த கணவரையும் தனது குழந்தையையும் பாதுகாத்துப் பணவிடைகள் செய்து வரும் ராஜாவின் மனைவி விமலாவைப் பாராட்டியதுடன் சால்வையும் அணிவித்தார். 4 வருடமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த ராஜாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நல் உள்ளங்களுக்கும் வெளிக்கொண்டு வந்த நக்கீரனுக்கும் மேலவிடுதி மக்கள் நன்றி கூறினார்கள்.