வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர், உயிரிழந்தவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவத்துறை டீனிடம் விளக்கம் கேட்டுள்ளனர். வேலூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பேசுபொருளானது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
'புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறுநீரக ஒப்புயர்வு மையம் முழுமையாக கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே 6 கே.எல் டேங்க் ஆக்ஸிஜன் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 6 கே.எல் ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. மேலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.